புதுச்சேரி: அரசு காருக்கு ஓட்டுநர் இல்லை! இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் வருகை தந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ.-க்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட கார்களுக்கு உரிய ஓட்டுநர்கள் நியமிக்கப்படாததைக் கண்டிக்கும் வகையில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கு ஓட்டுநர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், தனது அதிகாரப்பூர்வ காரைப் பயன்படுத்தாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு நேரடியாக சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், அரசு அதிகாரிகள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்களைத் தங்களது பயன்பாட்டிற்கு வைத்துள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களின் கார்களுக்கு ஓட்டுநர்கள் நியமிக்கப்படாமல் அலட்சியம் காட்டப்படுவதாகக் குற்றம் சாட்டினார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே டூ-வீலரில் சட்டசபைக்கு வந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
