அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: முதலமைச்சர், சபாநாயகரிடம் எம்.எல்.ஏ. ஜி.நேரு அதிரடி புகார்!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தமக்கு எதிராக சமுதாயப் பிரதிநிதிகளைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியதாகக் கூறி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது உரிய வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நேயம் மக்கள் கழகத் தலைவருமான ஜி.நேரு (எ) குப்புசாமி முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உருளையன்பேட்டை தொகுதி பெரிய மார்க்கெட் பகுதியில் அதிகாலை வேளையில் காய்கறி வியாபாரம் செய்யும் பெண் ஒருவர் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் கோரியும், காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்டித்தும் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு வெளியே பொதுமக்களுடன் போராட்டம் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக நடந்துகொண்டதால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக மனு அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்திற்குச் சம்பந்தமில்லாத மீனவ சமுதாயப் பிரதிநிதிகளை அமைச்சர் தனது அறைக்கு வரவழைத்து, தமக்கு எதிராக சட்டப்பேரவை வாயில் படிக்கட்டில் போராட்டம் நடத்தத் தூண்டியதாக நேரு பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பொறுப்புள்ள அமைச்சரே சமுதாய மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியது ஆபத்தான முன்னுதாரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்காக நியாயம் கேட்டுப் போராடிய தங்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சட்டமன்றத்தில் அத்துமீறிப் போராட்டம் நடத்திய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக அவர் சாடியுள்ளார். எனவே, அமைச்சர் மீதும் போராட்டம் நடத்தியவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், போராட்டத்தின்போது அமைச்சர் பேசிய தொலைபேசி உரையாடல்களை முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


