புதுச்சேரி

புதுச்சேரி: சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாத இலவச அரிசி பணம் ரூ.1,600 வங்கிக் கணக்கில் வரவு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான இலவச அரிசி மானியத் தொகை தலா ரூ.1,600 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உடனடி நடவடிக்கையால் ஏழை எளிய குடும்பங்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலமாக பொதுமக்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அரிசிக்கு மாற்றாக அதற்கான நேரடி பணப்பரிவர்த்தனை திட்டத்தின் (DBT) கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளிலேயே நிதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிலுவையில் இருந்த தொகையில் இரண்டு மாதங்களுக்கான இலவச அரிசி பணம் ரூ.1,600 தற்போது சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிவப்பு அட்டைதாரர்களுக்கு நிலுவையில் உள்ள மீதமுள்ள 4 மாதங்களுக்கான தொகையும் தொடர்ந்து விடுவிக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, மஞ்சள் நிற ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கான இலவச அரிசி மானியத் தொகையும் அடுத்தகட்டமாக அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் வங்கி கணக்கில் நிதி வரவு வைக்கப்பட்டதற்கு பயனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மக்கள் நலனை முன்னிறுத்தி சிறப்பான ஆட்சியை வழிநடத்தி வரும் முதலமைச்சர் ந. ரங்கசாமிக்கு பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன