தமிழ்நாடு

தென்னக இரயில்வேயில் முதன்முறை: மதுரை – குருவாயூர் விரைவு ரயிலில் விஸ்டாடோம் கண்ணாடி பெட்டி அறிமுகம்!

மதுரை: தென்னக இரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, இயற்கை எழில் கொஞ்சும் வழித்தடங்களை பயணிகள் முழுமையாகக் கண்டு ரசிக்கும் வகையிலான ‘விஸ்டாடோம்’ (Vistadome) கண்ணாடி காட்சி வடிவப் பெட்டி மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் விரைவு இரயிலில் முறைப்படி இணைக்கப்பட்டு பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இமயமலைப் பகுதியின் கல்கா – சிம்லா, மேற்குத் தொடர்ச்சி மலையின் மும்பை – மட்கான் (கோவா) மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் விசாகப்பட்டினம் – அராக்கு பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் புகழ்பெற்ற விஸ்டாடோம் ரயில்களைப் போன்று, தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் செங்கோட்டை – புனலூர் மலைப்பாதை இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகும். அடர்ந்த வனம், அருவிகள், குகைகள் மற்றும் பாரம்பரிய வளைவுப் பாலங்கள் நிறைந்த இந்த வழித்தடத்தில் காட்சிப் பெட்டிகளை இயக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் நீண்ட நாள் கனவாக இருந்தது.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவிக்கையில், “செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான மிகச்சிறப்பான இயற்கை எழில் சார்ந்த வழித்தடத்தில் விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய இரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இரயில்வே வாரியம், தற்போது முதற்கட்டமாக 3 மாத காலத்திற்கு சோதனை ஓட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. அதன் பயனாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இன்று தொடங்கியுள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விஸ்டாடோம் பெட்டியில் பயணித்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன், தென்னக இரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் திரளாகப் பங்கேற்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையை 360 கோணத்தில் ரசிக்கும் வகையில் அமைந்துள்ள இப்பெட்டி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன