தமிழ்நாடு

சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகமா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, அண்ணா சாலையில் பல்லவன் இல்லம் அமைந்துள்ள இடத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்ட அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையா என்பதைத் தமிழக அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை அரசு கைவிட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது அதைவிடப் பல மடங்கு தவறான முடிவாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள முதன்மையான இடங்களில் பல்லவன் இல்லப் பகுதி உள்ளது. ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் அண்ணா சாலையில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவே முடியாது. மேலும், பட்டினப்பாக்கத்தில் 26.26 ஏக்கரும், முன்பு ஓமந்தூரார் தோட்டத்தில் 39.54 ஏக்கரும் அடையாளம் காணப்பட்ட நிலையில், பல்லவன் இல்லத்தின் மொத்தப் பரப்பளவோ வெறும் 13.22 ஏக்கர் மட்டுமே உள்ளது. இவ்வளவு குறுகிய பரப்பளவில் தலைமைச் செயலகம் அமைப்பது நிர்வாக ரீதியாகச் சாத்தியமற்றது என அவர் விளக்கியுள்ளார்.

கூவம் ஆற்றின் கரையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், அது சுற்றுச்சூழல் பாதிப்பையும் வெள்ள அபாயத்தையும் ஏற்படுத்தும். மேலும் பல்லவன் இல்லத்தைச் சுற்றிலும் அண்ணா சாலை, பல்லவன் சாலை, கூவம் ஆறு, வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால் எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்ய முடியாது என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

அடுத்த 100 ஆண்டுகளின் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைய வேண்டுமானால், சென்னைக்கு வெளியே குறைந்தபட்சம் 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக அதனை அமைக்க வேண்டும். குறுகிய இடங்களைத் தேர்வு செய்து மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளை எடுக்காமல், தொலைநோக்குப் பார்வையுடன் சென்னைக்கு வெளியே புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க அரசு முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன