புதுச்சேரி

புதுச்சேரி முதலியார்பேட்டையில் பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து: தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

புதுச்சேரி:

புதுச்சேரி முதலியார்பேட்டை பிராமணர் வீதியில் நீண்ட நாட்களாகப் பூட்டியிருந்த வீடொன்றில் இன்று திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

முதலியார்பேட்டை பிராமணர் வீதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீடு நீண்ட காலமாக ஆட்கள் இன்றி பூட்டப்பட்டுக் கிடந்துள்ளது. இந்த நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள வீட்டின் உள்ளிருந்து திடீரெனக் கரும்புகை வெளியேறி தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் க.வெற்றிச்செல்வத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அளித்த அவசரத் தகவலையடுத்து, வெற்றிச்செல்வம் உடனடியாகத் தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் வழங்கி துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வாகனத்துடன் தகுந்த மீட்பு உபகரணங்களை எடுத்துக்கொண்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு படுக்கை அறை, கட்டில் மற்றும் பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் சிறப்பு வேதியியல் வாயுப் பொருட்களைப் பீய்ச்சியடித்து, தீவிரமாகப் போராடித் தீயை முழுமையாக அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீயணைப்பு வீரர்களின் மின்னல் வேகச் செயல்பாட்டின் காரணமாக, தீ அருகிலுள்ள பிற வீடுகளுக்குப் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் ஏற்படவிருந்த பெரும் விபத்தும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலும் உரிய நேரத்தில் தவிர்க்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்து உதவிய தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன