புதுச்சேரி

புதுச்சேரியில் அனுமதியற்ற கட்டிடங்களை முறைப்படுத்த மேலும் 3 ஆண்டுகள் அவகாசம் நீட்டிப்பு: அரசு அரசாணை வெளியீடு

புதுச்சேரி, 20/10/2026: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முறையான அனுமதி பெறாமலும், திட்ட அனுமதியை மீறியும் கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் 2029 ஜூலை 15 ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி நகர மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் (Puducherry Town and Country Planning Act 1969) பிரிவு 46A-ன் கீழ், உரிய திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை செய்ய ‘புதுச்சேரி ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டம்’ (The Puducherry One Time Regularization scheme 2025) செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டுவசதித் துறை சார்புச் செயலாளர் எஸ். முருகேசன் இதற்கான அரசாணையை (G.O. Ms. No.27/2026-Hg) வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க மேலும் மூன்று ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு, 15.07.2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட மற்றும் விதிமீறல் உள்ள கட்டிட உரிமையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு விதிகளுக்குட்பட்டு உரிய கட்டணங்களைச் செலுத்தி தங்கள் கட்டிடங்களை முறைப்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன