அமைச்சர்களுக்கு இலாகா இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது: பேராசிரியர் ம. ராமதாஸ்
புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமலும், முழுமையான அமைச்சரவை அமைக்கப்படாமலும் ஆட்சி நடத்தப்படுவது சரியானதல்ல என முன்னாள் நகர் சபைத் தலைவரும் பேராசிரியருமான ம. ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: புதுச்சேரியில் கடந்த 75 ஆண்டுகால மக்களாட்சி நடைமுறையில், அமைச்சர்கள் வழியாகவே மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளன. தேவையான அமைச்சரவை அமைப்பின்றி ஆட்சி நடத்துவதால், மக்கள் நலம் சார்ந்த முடிவுகள் எடுப்பதிலும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மக்களுக்கு நேரடியாகப் பொறுப்பேற்கும் அமைச்சர்கள் இல்லாமல், அதிகாரிகள் மட்டுமே நிர்வகிக்கும் நிலை தொடர்ந்தால், மக்களின் கோரிக்கைகளும் பிரச்சினைகளும் உரிய முறையில் தீர்வு காணப்படாது; ஜனநாயக ஆட்சி நடைமுறையும் பாதிக்கப்படும் என்றார்.
புதுச்சேரி மக்களின் நலனுக்காக விரைவில் முழுமையான அமைச்சரவையை அமைத்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என ம. ராமதாஸ் தெரிவித்தார்.


