தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகத்தை பார்வையிட்ட கானா நாட்டு உள்துறை அமைச்சர் குழு: உயர் அதிகாரிகள் விளக்கம்!

சென்னை: கானா குடியரசின் உள்துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகத்திற்கு (SCRB) வருகை தந்து அதன் நவீன செயல்பாடுகளைப் பார்வையிட்டு கேட்டறிந்தனர். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால் வழிகாட்டுதலின் பேரில் இந்த சிறப்புக் கலந்தாய்வு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
கானா குடியரசின் உள்துறை அமைச்சர் திரு. முகமது முபாரக் முண்டகா தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கு, தமிழ்நாட்டில் குற்றத் தடுப்பு, குற்றவாளிகளைக் கண்டறிதல் மற்றும் குற்ற ஆவணங்களை டிஜிட்டல் முறையில் கையாள்வது உள்ளிட்ட SCRB-யின் நவீன தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு. டி.எஸ். அன்பு மற்றும் மாநில குற்ற ஆவணக் காப்பக காவல்துறைத் தலைவர் திருமதி. சோனல் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்து கானா நாட்டு பிரதிநிதிகளுக்கு காவல்துறையின் மேலாண்மை மற்றும் தரவு பகுப்பாய்வு நடைமுறைகளை விளக்கினர்.



