தமிழ்நாடு

மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: மயிலாடுதுறை கடற்பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டாவில் இத்திட்டம் வருவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை கடற்கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள PY-3 எண்ணெய் வயலில் புதிதாக 5 எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்காக, ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அன்ட் புரொடக்ஷன் என்ற தனியார் நிறுவனம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நில அதிர்வு ஆய்வுகள் (Seismic Survey) மீன்களின் உணர்வு மண்டலத்தைப் பாதிப்பதோடு, வெளியேறும் நச்சுக் கழிவுகளால் மீன்வளம் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். கடல் ஆமைகள், பவளப்பாறைகள் நிறைந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க இப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது கடல் சூழல் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஓஎன்ஜிசி கிணறுகளால் கதிராமங்கலம், குத்தாலம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்களும் நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய திட்டம் விவசாயிகளையும் மீனவர்களையும் நிலைகுலையச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமம் வழங்கும் ஓஏஎல்பி (OALP) முறையை மாற்றி, மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன