புதுச்சேரி

புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ந.ரங்கசாமி சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சிலிண்டர் மானியம் ரூ.300-லிருந்து ரூ.350 ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவித்தார். அதேபோன்று, இதர குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சிலிண்டர் மானியம் ரூ.150-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், மாநிலத்தில் முதியோர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகைகள் விரைவில் உயர்த்தி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையைப் போன்றே, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன