புதுச்சேரி

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு 5 மாத நிலுவை சம்பளத்தை உடனே வழங்குக: சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக நிலுவைச் சம்பளத்தை விடுவிக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாகப் பேசிய அவர், பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்கு இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது என்றார். தொடர்ந்து சம்பளம் கிடைக்காத காரணத்தால் ஓட்டுநர்களின் குடும்பங்கள் அன்றாட தேவைகளுக்கே வழியின்றி பெரும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

எனவே, அவர்களின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை விடுவிக்க ஆவண செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், எதிர்காலத்தில் ஆம்புலன்ஸ் சேவைகள் தடையின்றி சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், இச்சேவையைத் தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அவையில் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன