இலாசுப்பேட்டையில் புதிய துணை மின் நிலையம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி: புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள துணை மின் நிலையத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் என். ரங்கசாமி நேரில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உள்துறை மற்றும் மின்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்து உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இலாசுப்பேட்டை பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுசெய்யும் வகையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்தத் துணை மின் நிலையம் அமையவுள்ளது.
இப்பணிகள் நிறைவுபெறும் போது, இலாசுப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் குறைந்த மின்னழுத்தப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதுடன், பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தடையற்ற சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.