புதுச்சேரி நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மளிகைப் பொருட்கள் (CBDC மளிகைப் பொருட்கள்) விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. வெளிச்சந்தை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்கவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடைகள் மூலம் மளிகைப் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கி கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரியின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் செயல்பட்டு வரும் 365 நியாயவிலைக் கடைகளிலும் ஒரே சீரான, அரசால் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலையில் மளிகைப் பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 250 குடும்பங்களுக்கு ஒரு கடை வீதம் செயல்படுவதால் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே எளிதாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுவதால் இடைத்தரகர்களின்றி மிகக் குறைந்த விலையில் உயர்தர மளிகைப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இக்கடைகளில் பொதுமக்கள் ரொக்கப் பணம் தவிர்த்து, CBDC (டிஜிட்டல் ருபீ) மற்றும் அனைத்து வகையான UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவும் பணம் செலுத்திப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் தனியார் கடைகளில் நிலவும் விலை வேறுபாடுகள், கூடுதல் செலவுகள் மற்றும் கள்ளச்சந்தை பதுக்கல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளைப் பயன்படுத்தி மலிவு விலையில் தரமான மளிகைப் பொருட்களை வாங்கிப் பயன்பெறுமாறு புதுச்சேரி கூட்டுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
