கணவரின் முதல் திருமணத்தை அறிந்து மனமுடைந்த பெண் பல் மருத்துவர் தற்கொலை: புதுச்சேரியில் சோகம்
புதுச்சேரி, செப். 09: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால், மனமுடைந்த இளம் பெண் பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் பல் மருத்துவர் ஒருவருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அவரது கணவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பது அண்மையில் தெரியவந்தது. திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை அறிந்து அப்பெண் கடும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தார்.
இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் கடுமையான மன உளைச்சலில் இருந்த அவர், அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


