புதுச்சேரி

புதுச்சேரியில் சோகம்: ஜிப்மர் முதுகலை மருத்துவ மாணவி மயக்க ஊசி போட்டு தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது!

புதுச்சேரி, செப். 17: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்த மாணவி ஒருவர், தனக்குத்தானே மயக்க மருந்து மற்றும் இன்சுலின் ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வெங்கட்டா நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரி வாசுதேவனின் மகள் யோகலட்சுமி (26). இவர் கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் எம்.டி. இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று காலை யோகலட்சுமியின் அறைக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால், சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. அவரது சடலத்தின் அருகே காலி மயக்க மருந்து பாட்டில்கள், இன்சுலின் மற்றும் 3 ஊசிகள் கைப்பற்றப்பட்டன.

தகவலறிந்து வந்த பெரியகடை போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யோகலட்சுமி அறையில் இருந்த ஒரு டைரியில் உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில், இந்த முடிவை தானே சுயமாக எடுத்ததாகவும், இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம் எனவும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னித்துவிடுமாறும் எழுதியுள்ளார். தேர்வுச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன