புதுச்சேரி

புதுச்சேரியில் மின் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம்: ஊதியக் குறைப்பு மற்றும் அபராதத்திற்கு எதிர்ப்பு!

புதுச்சேரி, அக். 05: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும் மின்சார பேருந்துகளின் (Electric Bus) ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகரின் முக்கிய வழித்தடங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதுச்சேரி நகர்ப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தும் நோக்கில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊதியத்தில் அநியாயமாகக் பிடித்தம் செய்யப்படுவதாகவும், பணி நேரத்தில் தேவையற்ற காரணங்களைக் கூறி அபராதம் விதிப்பதாகவும் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், பணிச் சூழலில் ஏற்படும் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் குறித்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பணிமனையில் ஒன்றுதிரண்ட ஓட்டுநர்கள் கைகளை உயர்த்தி முழக்கங்களை எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கினர். தங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக முழுமையாக வழங்க வேண்டும், நியாயமற்ற அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன