வாக்குச்சாவடி அருகே கை சின்னம் துண்டுப் பிரசுரம் வீசிய காங்கிரஸ் பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு!
புதுச்சேரி, அக் 7:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றபோது, வாக்குச்சாவடிகள் அருகே காங்கிரஸ் தேர்தல் சின்னம் பொறித்த பிரசுரங்களை வீசிச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட சுப்பையா நகர் மற்றும் லட்சுமி நகர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 3 வாக்குச்சாவடிகளின் அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர் ஒருவர், காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுச் சீட்டுகளை சாலையில் வீசி எறிந்துவிட்டு தப்பிச் சென்றார். வாக்குப்பதிவு நாளான நேற்று நடந்த இச்சம்பவம் அரசியல் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பிற கட்சியினர் உடனடியாக தேர்தல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்தல் துறை அலுவலர்கள், வீசப்பட்ட துண்டுப் பிரசுரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமீறல் தொடர்பாக கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோரிமேடு போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான தினேஷ் (வயது 28) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து பிரசுரங்களை வீசியது உறுதியானது.
இதையடுத்து தினேஷ் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ள போலீசார், தற்போது தலைமறைவாக உள்ள தினேஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.