தேசியம்

பிஎம் வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டம்: ரூ.15,634 கோடி கடன் ஒப்புதல் – அரசு அறிவிப்பு

பொருளாதாரக் தடைகளால் எந்தவொரு மாணவருக்கும் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதிசெய்யும் நோக்கில், மத்திய அரசு பிஎம் வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டம் (PM-Vidyalaxmi) என்ற புதிய மத்திய துறை திட்டத்தை 2024 நவம்பரில் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,12,817 மாணவர்களுக்கு ரூ.15,634.78 கோடி மதிப்பிலான பிணையமற்ற மற்றும் உத்தரவாததாரர் இல்லாத கல்விக்கடன்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம் வித்யாலட்சுமி திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இத்திட்டத்தின் மூலம் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) தகுதியின் அடிப்படையில் சேர்க்கை பெறும் மாணவர்கள் எவ்வித பிணையமோ அல்லது உத்தரவாததாரரோ இன்றி கல்விக்கடன் பெற முடியும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள மாணவர்களுக்கு, ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

வேறெந்த உதவித்தொகையோ அல்லது வட்டி மானியமோ பெறாத, ஆண்டிற்கு 1 லட்சம் புதிய மாணவர்கள் இவ்வட்டி மானியப் பலனைப் பெறத் தகுதியுடையவர்கள். 2024-25 முதல் 2030-31 வரை 7 லட்சம் புதிய மாணவர்களுக்கு வட்டி மானியம் வழங்குவதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம்

மாணவர்கள் எளிதாக விண்ணப்பிக்க வசதியாக https://pmvidyalaxmi.co.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு, 2025 பிப்ரவரி 25 முதல் செயல்பாட்டில் உள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான எளிய விண்ணப்ப நடைமுறை இதில் பின்பற்றப்படுகிறது. 2024 நவம்பர் 6 முதல் 2026 ஜூலை 21 வரையிலான காலத்தில் 1,12,817 கடன்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

போலியான விண்ணப்பங்களைத் தவிர்க்க ஆதார் சார்ந்த சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, மாணவர்கள் ‘PM-Vidyalaxmi Digital Rupee App’ செயலியைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். வங்கிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றதும், வட்டி மானியத் தொகை மாணவரின் டிஜிட்டல் பணப்பையில் (Digital Wallet) செலுத்தப்பட்டு, பின்னர் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் கல்விக்கடன் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும். 2-ஆம் ஆண்டு முதல் வட்டி மானியம் பெற மாணவர்களின் பருவத்தேர்வு கல்விச் செயல்பாடு திருப்திகரமாக இருக்க வேண்டும்.

கடன் உத்தரவாத நிதி திட்டம் மற்றும் வங்கிகளின் பங்களிப்பு

கல்விக்கடன்களுக்கான பிஎம் உயர்கல்வி ஊக்குவிப்பு கடன் உத்தரவாத நிதி திட்டத்தின் (PM-USP CGFSEL) கீழ், ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக்கடன்களுக்கு மத்திய அரசே 75% வரை உத்தரவாதம் அளிக்கிறது. 2015-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2026 ஜூலை 21 வரை 14,65,880 கடன் உத்தரவாதங்களின் கீழ் ரூ.59,843.74 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு உதவும் வகையில், தற்போது இத்திட்டத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 20 தனியார் வங்கிகள், 25 மண்டல கிராமப்புற வங்கிகள் மற்றும் 7 கூட்டுறவு வங்கிகள் இணைந்துள்ளன.

சேர்க்கை விகிதம் அதிகரிப்பு

உதவித்தொகை மற்றும் கல்விக்கடன்கள் இணைந்து உயர்கல்வி சேர்க்கையை உயர்த்தியுள்ளதுடன், இடையில் படிப்பை நிறுத்தும் விகிதத்தையும் குறைத்துள்ளன. இதன் விளைவாக, உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 2013-14 இல் 23.0 ஆக இருந்தது, 2023-24 இல் 30.0 ஆக உயர்ந்துள்ளது.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

தகவல் ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB), இந்திய அரசு — 27 ஜூலை 2026.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன