தமிழ்நாடு

உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் உன்னத முயற்சி: குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘தியாகச் சுவர்’ திறப்பு!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் பிரத்யேக ‘தியாகச் சுவர்’ அமைக்கப்பட்டுள்ளது. மனிதநேயத்தின் உச்சமாகத் திகழும் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும், தங்களின் இன்னுயிரை ஈந்து பிறருக்கு மறுவாழ்வு அளித்த கொடையாளர்களின் நினைவைப் போற்றவும் இந்த சிறப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தியாகச் சுவரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்து, அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உடல் உறுப்பு தானம் செய்த நபர்களின் பெயர்கள் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. தங்களின் இறுதி மூச்சுக்குப் பிறகும் பலருக்கு வாழ்வளித்த கொடையாளர்களின் தியாகத்தை இளைய தலைமுறையினரும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நினைவிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வரை உடல் உறுப்பு தானம் வழங்கி பலரின் உயிரைக் காத்த பிரவீன், ஜஸ்டின் பெர்னாட்ஷா, சுப்பிரமணியன், மகேஷ், விஷால் மற்றும் லதா ஆகிய 6 கொடையாளர்களின் பெயர்கள் இந்த தியாகச் சுவரில் முதற்கட்டமாகப் பொறிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்தச் செயல் கொடையாளர்களின் குடும்பத்தினரிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

விபத்து மற்றும் மூளைச்சாவு ஏற்படும் இக்கட்டான சூழலில், சோகத்தையும் தாண்டி உறுப்பு தானம் செய்ய முன்வரும் குடும்பங்களின் முடிவை கௌரவிக்கும் இத்தகைய முயற்சிகள், பொதுமக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பலமடங்கு அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் பெயர்களும் தொடர்ந்து இந்த தியாகச் சுவரில் பொறிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன