ஆசிய போட்டி தடகளத்தில் வெள்ளி வென்று சாதனை: தமிழக வீரர்கள் வித்யா ராம்ராஜ், விஷாலுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு!

சென்னை:
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி மற்றும் அதில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சாதனை படைத்த தமிழக வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் 4 வீரர்கள் அடங்கிய இந்த கலப்பு தொடர் ஓட்டக் குழுவில், 2 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமின்றி, தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) ‘ELITE Sportsperson Scheme’ திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வரும் இவர்கள் இருவரும் தங்களது அயராத கடின உழைப்பால் இச்சாதனையைப் படைத்துள்ளனர். இவர்களது மாபெரும் வெற்றி விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும், தொடர்ந்து பல புதிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



