அரசு சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில தடகளப் போட்டி: சென்னையில் கோலாகல தொடக்கம்!

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் உற்சாகமாகத் தொடங்கின. இந்த விளையாட்டுப் போட்டிகளை சி.டி.ஆர். நிர்மல்குமார் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 அரசு சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். வருங்கால சட்ட வல்லுநர்களான மாணவர்களின் விளையாட்டுத் திறன், உடற்தகுதி, தலைமைப் பண்பு, ஒழுக்கம் மற்றும் குழு உணர்வை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டிகள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இத்தடகளப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிபெறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள், தேசிய அளவில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



