புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளைத் தடுக்க வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு!

புதுச்சேரி, 24/09/2026: புதுச்சேரி மாவட்டத்தின் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளைத் தடுக்கும் வகையில் வருமான வரித்துறை சார்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் காலியாக உள்ள உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 07.09.2026 அன்று வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, வருகின்ற 06.10.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுப்பது மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வருமான வரித்துறை சார்பில் பிரத்யேக தேர்தல் கட்டுப்பாட்டு அறை (Election Control Room) செயல்படத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 75989 81438 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ அல்லது tn.electioncomplaints2026@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன