தமிழகத்தில் இன்று முதல் 26 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை, அக்டோபர் 21: தமிழகத்தில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.
தென்தமிழக கடலோரப் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, தென்காசி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், நீலகிரி, கோவை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், திருச்சி, ஈரோடு, திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அக்டோபர் 25 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை எம்ஜிஆர் நகரில் 15 சென்டிமீட்டர் அளவுக்கு மிக கனமழை கொட்டியுள்ளது. வடபழனியில் 14 சென்டிமீட்டரும், சைதாப்பேட்டை, விமான நிலையம் மற்றும் ஆலந்தூரில் தலா 13 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. எல்நினோ தாக்கத்தால் வடகிழக்கு பருவமழையின் அளவு குறைய வாய்ப்பில்லை என்றும், மாறாக அதன் வலிமை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.