புதுச்சேரியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு – உயிரிழந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
புதுச்சேரி, அக்டோபர் 21: நாடு முழுவதும் பாதுகாப்பு பணியின் போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து காவலர் அணிவகுப்பு மரியாதையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். கடந்த ஓராண்டில் பணியின் போது உயிர் நீத்த ஒன்பது காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இருபத்தி ஒரு துப்பாக்கி குண்டுகள் முழங்க இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு கொரடா ஆறுமுகம் என்கிற ஏகேடி, காவல்துறை இயக்குனர் ஷாலினி, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சத்தியசுந்தரம், முதுநிலை காவலர் கண்காணிப்பாளர் கலைவாணன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.