நெடுங்காடு தொகுதிக்கு பிரத்யேக புதிய ஆம்புலன்ஸ் சேவை: அதானி துறைமுக CSR நிதியுதவியுடன் காரைக்காலில் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு!

காரைக்கால்: நெடுங்காடு தொகுதி மக்களின் அவசர மருத்துவத் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யும் வகையில், காரைக்கால் அதானி துறைமுகத்தின் சமூகப் பங்களிப்பு (CSR) நிதியின் கீழ் வழங்கப்பட்ட புதிய ஆம்புலன்ஸ் வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் V. விக்னேஸ்வரன் எம்.எல்.ஏ. தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். மேலும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன் ஐ.ஏ.எஸ். அவர்களிடம் இக்கோரிக்கை தொடர்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இதன் பலனாக, காரைக்கால் அதானி துறைமுகத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் நெடுங்காடு தொகுதிக்கென பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காரைக்கால் அதானி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் வழங்கும் விழாவில், புதுச்சேரி மாண்புமிகு துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன் காணொலிக் காட்சி (Video Conferencing) வாயிலாகப் பங்கேற்று புதிய ஆம்புலன்ஸை மக்கள் சேவைக்கு முறைப்படி அர்ப்பணித்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் V. விக்னேஸ்வரன், காரைக்கால் அதானி துறைமுகத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) கேப்டன் சச்சின் ஸ்ரீவாஸ்தவ், புதுச்சேரி சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவ சேவைகள் இயக்குநர், துணை இயக்குநர் (தடுப்பூசி பிரிவு), காரைக்கால் துணை ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கிராமப்புறப் பகுதிகளைக் கொண்ட நெடுங்காடு தொகுதி மக்களுக்கு அவசர சிகிச்சை காலங்களில் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல இந்த ஆம்புலன்ஸ் சேவை பேருதவியாக இருக்கும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


