காரைக்கால்

காரைக்காலில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில் நடைபெற்றது!

காரைக்கால்: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் பணியிடப் பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காரைக்கால் காமராஜர் வளாகத்தில் புதுச்சேரி அரசு மகளிர் ஆணையம் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தலைமை தாங்கி விழிப்புணர்வு உரை ஆற்றினார். இதில் மகளிர் ஆணையத்தின் பிரதிநிதிகள் நாகஜோதி மற்றும் சுஜாதா ஆகியோர் கலந்துகொண்டு, பணியிடங்களில் பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் மனரீதியான மற்றும் உடல்ரீதியான பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணும் அணுகுமுறைகள் குறித்தும் விரிவான விளக்கங்களை அளித்தனர்.

மேலும், அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுகுணா பங்கேற்று, பெண்களுக்குப் பணியிடங்களில் கிடைக்க வேண்டிய பாதுகாப்பான சூழல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கட்டாயமாக ‘உள்புகார் குழு’ (Internal Complaints Committee – ICC) அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள் அல்லது பிற அத்துமீறல்கள் நிகழும்போது அச்சமின்றி புகார் அளிப்பதற்கான சட்ட நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் பெண்களுக்கு ஆதரவாக உள்ள சட்டப் பாதுகாப்புகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன