மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தீவிரம்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஜனநாயகக் கடமையை எளிதாக நிறைவேற்றும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று, ரகசிய வாக்குப்பதிவு முறையில் தபால் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த தபால் வாக்குப்பதிவு பணிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன், தேர்தல் நுண் பார்வையாளர்கள் முன்னிலையிலும், முழுமையான வீடியோ பதிவோடு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் எவ்வித சிரமமுமின்றி ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.



