பிரதமர் மோடி பிறந்தநாள்: ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 500 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்!
புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒரு மாத காலத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டு, தொடர் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு பிரட், பிஸ்கட் மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு தாய்மார்களுக்கு இப்பொருட்களை நேரில் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.கே. ரத்தினவேல், மாநில பொதுச்செயலாளர்கள் மோகன் குமார், எம். லட்சுமி நாராயணன், மாநில செயலாளர்கள் தமிழ்மாறன், கோகிலா, மாவட்ட தலைவர்கள் உலகநாதன், ஓம் அனிதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

