தட்டாஞ்சாவடியில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்: என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழுவில் முதல்வர் ரங்கசாமி பேச்சு!

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த முறையை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் என்.ரங்கசாமி கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மக்கள் தங்களின் நல்லாட்சியை அங்கீகரித்து மீண்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் நலத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. புதிய மற்றும் பழைய திட்டங்கள் அனைத்தும் அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமாக சென்றடைவதை அரசு உறுதி செய்துள்ளது” என்றார்.
மேலும், தட்டாஞ்சாவடி தொகுதியை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது என்று குறிப்பிட்ட முதல்வர், மக்களுக்காக யார் தொடர்ந்து களத்தில் பணியாற்றுவார்கள் என்பது வாக்காளர்களுக்கு தெளிவாகத் தெரியும் என்றார். அரசின் சாதனைகளையும் மக்கள் நலப்பணிகளையும் வீடு வீடாகச் சென்று விளக்கினால் தேர்தலில் மகத்தான வெற்றி நிச்சயம் என அவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
