புதுச்சேரி இ.சி.ஆர் சாலையில் பயங்கரம்: ரவுடி ஆனந்த் பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை – கூலிப்படையினர் கைது!
புதுச்சேரி: புதுச்சேரி பாக்கமுடையான்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த் என்பவர், கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைப் பின்தொடர்ந்து சென்று திருமண மண்டபம் ஒன்றின் எதிரே வழிமறித்து சரமாரியாகத் தாக்கி படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஆனந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் தீவிர முதற்கட்ட விசாரணையில், கடந்த மே மாதம் நடைபெற்ற பவுன்ராஜ் என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
பவுன்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பழனி, கமலேஷ் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் இருந்த அவர்களது கூட்டாளியான ஆனந்தைக் குறிவைத்து இக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. இதற்காக மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து கூலிப்படையினரை வரவழைத்து மிகத் திட்டமிட்டு இச்சம்பவத்தைச் செய்துள்ளது விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படை நபர்களை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள இருவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
