ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கு: ஆபாச வீடியோவை மறைத்த ஊழியர் கணேசன் கைது

சென்னை: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணியின் ஆபாச வீடியோவை செல்போனில் மறைத்து வைத்திருந்த ஊழியர் கணேசன் என்பவரை சென்னை பெருநகர காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகியோரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் 23 ஆண்டுகளாக வீரமணியின் ஜெம் கிரானைட் நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது பாலாஜி குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது செல்போனில் வீரமணி சிறுமியிடம் அத்துமீறும் வீடியோவை வைத்திருந்ததும், இதுகுறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவிக்காமல் மறைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து குற்றத்தை மறைத்த பிரிவின் கீழ் கணேசனை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கணேசனுக்கு இந்த வீடியோவை அனுப்பியது யார், வீடியோவை மறைத்து வைத்திருந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



