கனடா விமான விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி, தமிழக மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ஆழ்ந்த இரங்கல்!

புதுச்சேரி, செப். 22: கனடாவில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானிகள் இருவரின் மறைவுக்கு புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட துயரமான விமான விபத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் ஆகிய இரு இளம் மாணவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இளம் வயதில் தங்களது எதிர்கால கனவுகளை நோக்கிப் பயணித்த இந்த மாணவர்களின் எதிர்பாராத மறைவு அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்தத் துயரமான நேரத்தில், உயிரிழந்த புதுச்சேரி மாணவர் ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை அவர்களது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கிடப் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
