பிரதமர் மோடி பிறந்தநாள்: புதுச்சேரி முழுவதும் தெருமுனை நாடகங்கள் மூலம் மத்திய அரசு திட்டங்கள் விழிப்புணர்வு – பாஜக தலைமை அலுவலகத்தில் ஒத்திகை

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தெருமுனை நாடகங்கள் வாயிலாக மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், பிரதமரின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 25 ஆண்டுகால அரசு நிர்வாக சேவையை மிக விமரிசையாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த விழாக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, புதுச்சேரியின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் தெருமுனை நாடகங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தெருமுனை நாடகங்களின் வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாமானிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.



