மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழில் பாட அனுமதி மறுப்பு: சென்னையில் ஓதுவார்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்!

சென்னை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் யாகசாலை, மூலவர் கருவறை மற்றும் கோபுரப் பகுதிகளில் தமிழில் திருமுறை பாட ஓதுவார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ் ஓதுவார்கள் அமைப்பினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குடமுழுக்கின் போது வேள்விச் சாலை, கருவறை மற்றும் விமானக் கோபுரங்களில் தமிழ் முறைப்படி பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரப் பாடல்களைப் பாட ஓதுவார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து, தமிழ் முறைப்படி வழிபாடு நடத்த உரிய அனுமதி வழங்கக் கோரி தமிழ் ஓதுவார்கள் அமைப்பினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தீவிர உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். குடமுழுக்கின் அனைத்து நிலைகளிலும் தமிழிலும் வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



