புதுச்சேரி

புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சேவைகள் முடங்கி பொதுமக்கள் அவதி!

புதுச்சேரி: அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (UFBU) விடுத்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்ட அழைப்பை ஏற்று, புதுச்சேரியிலும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக யூனியன் பிரதேசத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டதால் பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டுக் காணப்பட்டன.

மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக யூகோ வங்கி கிளை முன்பாகத் திரண்ட வங்கி ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ள ஊழியர்களை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் கொண்டுவர வேண்டும், ஓய்வூதியத் தொகையை மாற்றியமைத்து மேம்படுத்த வேண்டும் மற்றும் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சீரான அகவிலைப்படி வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன