புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையிலான ஆராய்ச்சி செவிலியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு!

புதுச்சேரி, செப். 09:
புதுச்சேரி தன்வந்திரி நகரில் இயங்கி வரும் மத்திய அரசின் முன்னணி மருத்துவ நிறுவனமான ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆராய்ச்சி செவிலியர் (Research Nurse) பணியிடத்திற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜிப்மர் மருத்துவ புற்றுநோயியல் (Medical Oncology) துறையின் பேராசிரியர் டாக்டர் பிஸ்வஜித் துபாஷி அவர்களின் கீழ், மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT) நிதி உதவியுடன் குழந்தைகளுக்கான லுகேமியா புற்றுநோய் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு ஒரு ஆராய்ச்சி செவிலியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ.31,500 தொகுப்பூதியமாக வழங்கப்படும். பணிக்காலம் ஓராண்டு ஆகும்; தேவை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் மேலும் ஓராண்டு வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. பி.எஸ்சி செவிலியர் (B.Sc Nursing) படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, புறநோயாளிகள் பிரிவு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நோயாளி மற்றும் அவர்களின் உறவினர்களுடன் தொடர்புகொண்டு தகவல் பெறுவதற்கு ஏதுவாக தமிழ் மொழியில் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருப்பது கட்டாயத் தகுதியாகும். சிறார் புற்றுநோயியல் பிரிவு அனுபவமும் கணினி அறிவும் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
