மகாகவி பாரதியாரின் நினைவு நாள்: மலரஞ்சலி செலுத்திப் புகழாரம் சூட்டிய குடியரசு துணைத் தலைவர்!

புதுடெல்லி:
தம் வாழ்நாளைத் தேசப் பணிக்கும், தமிழ்த் தொண்டிற்கும் அர்ப்பணித்த பாட்டுக்கொரு புலவன் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளில், இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அவருக்கு மனமார்ந்த மலரஞ்சலி செலுத்தி வணங்கினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாரத நாடு பழம்பெரும் நாடு – நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என இந்தியப் பெருநாட்டின் ஒற்றுமையையும், அதன் பெருமையையும் ஓங்கி உரைத்தவர் பாரதியார் என்று பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். மேலும், “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்” எனத் தாய்மொழியின் பேராற்றலைப் போற்றிப் பாடிய பாரதியாரின் தீர்க்கமான வரிகள், காலம் கடந்தும் இன்றும் அதே வீரியத்துடன் அனைவரது மனங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தேசப்பற்று, சமுதாயச் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய உயரிய விழுமியங்களைத் தம் புரட்சிகரக் கவிதைகளாலும் சொந்த வாழ்வாலும் உலகிற்கு எடுத்துரைத்த மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றுவோம் என்றும், அவர் கண்ட உன்னதக் கனவுகளை நனவாக்கும் வகையில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த வலிமையான பாரதத்தை உருவாக்குவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பங்களிப்போம் என்றும் அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



