புதுச்சேரி

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகள்: அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆலோசனை!

புதுச்சேரி, செப். 3:
புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த அரசுத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ. குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆட்சியர் குலோத்துங்கன் பேசுகையில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கு காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும் எனவும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், சிலைகள் நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்றும், நீர்நிலைகளில் கரைக்க எடுத்துச் செல்லும்போது விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் ஊர்வலமாகச் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி கடல் மற்றும் நீர்நிலைகள் மாசடையாத வகையில் சிலைகளைக் கரைக்க வேண்டும் என்றும், சிலைகள் கரைக்கப்படும் தினமான வரும் 20-ஆம் தேதி மதுபானக் கடைகளை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன