ஏனாம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்!

ஏனாம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிராந்தியமான ஏனாமில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு புதிய ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன.
புனித ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், வாசனை திரவிய ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அம்மனுக்குக் கண்கவர் தனலட்சுமி அலங்காரம் பிரம்மாண்டமாகச் செய்யப்பட்டது. அம்மன் திருவுருவம் மற்றும் கருவறை முழுவதும் பல்வேறு மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
இந்த விசேஷ தனலட்சுமி அலங்காரத்தைக் காண ஏனாம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.