புதுச்சேரி வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை: எம்.எல்.ஏ ஜி.நேரு அரசுக்குக் கோரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் மற்றும் முன்னுரிமை அளிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி. நேரு (குப்புசாமி) அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இது தொடர்பாகப் பேசிய அவர், புதுச்சேரி முழுவதும் செயல்பட்டு வரும் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். தாய்மொழியான தமிழின் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாகவும் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிலாளர் துறை மூலம் இது தொடர்பான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இடம்பெறுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.