வில்லியனூர், மங்கலம் தொகுதிகளில் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ரவிக்குமார் ஆலோசனை!

புதுச்சேரி: வில்லியனூர் மற்றும் மங்கலம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்குமாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரனை, எம்.எல்.ஏ ரவிக்குமார் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் நேரில் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, இரு தொகுதிகளிலும் உள்ள பழுதடைந்த சாலைகளைச் சீரமைத்தல், புதிய அங்கன்வாடி மையங்கள் அமைத்தல், கழிவுநீர் வாய்க்கால்களைத் தூர்வாரி சீரமைத்தல் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட முக்கியப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், வில்லியனூர் நான்கு மாட வீதிகள் முழுவதும் முழுமையாக மின்விளக்குகள் அமைப்பது, புதிய குப்பைத் தொட்டிகள் அமைப்பது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகத் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைத் தீர்க்கும் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
