தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்; டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு!

திருப்பூர், செப். 13:
தாராபுரம் இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக, திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று, இடைத்தேர்தல் களத்தில் மேற்கொள்ள வேண்டிய சமூக வலைத்தள செயல்பாடுகள், பிரச்சார உத்திகள் மற்றும் களப்பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் விரிவான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதித்தனர்.


