மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் பேராசிரியர் பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

புதுச்சேரி, செப். 14:
மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இயங்கி வரும் வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனம் (VAMNICOM), நேரடி நியமனம் மூலம் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, பேராசிரியர் (Professor) – 03 பணியிடங்கள், இணைப் பேராசிரியர் (Associate Professor) – 03 பணியிடங்கள் மற்றும் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) – 03 பணியிடங்கள் என மொத்தம் 9 குரூப்-ஏ பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) ஒரு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கான கல்வித் தகுதி, அனுபவம், ஊதிய விகிதம் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்த முழு விவரங்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.vamnicom.gov.in என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் பதிவு போர்ட்டல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 11/10/2026 மாலை 6.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
