புதுச்சேரி

10 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்க ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு: வைத்திலிங்கம் எம்.பி அதிரடி நடவடிக்கை

புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவசர மருத்துவப் பயன்பாட்டிற்காக, 10 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.30 கோடியை மக்களவை உறுப்பினர் வி. வைத்திலிங்கம் ஒதுக்கீடு செய்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யும் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (திஷா கமிட்டி) ஆலோசனைக் கூட்டம் அண்மையில் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இன்றி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தனர். மேலும் இதற்கு உரிய நிதி உதவி அளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையினை அக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவையை உடனடியாக நிறைவேற்றும் வகையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (MPLADS) ரூ.1.30 கோடி நிதியை வைத்திலிங்கம் எம்.பி உடனடியாக ஒதுக்கீடு செய்தார். இந்நிதியைக் கொண்டு புதுச்சேரி சுகாதாரத் துறையின் பயன்பாட்டிற்காக 10 புதிய சிறிய ரக ஆம்புலன்ஸ்களை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதற்கான நிதி ஒதுக்கீட்டு ஆணை மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு முகமை (DRDA) மூலமாக சுகாதாரத்துறை இயக்குநருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த 10 ஆம்புலன்ஸ்களும் விரைவாக கொள்முதல் செய்யப்பட்டு, தேவைக்கேற்ப புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உடனடியாக பிரித்து வழங்கப்படும் என்று வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன