தேசியம்

மாணவர் அமைப்பினர் ரகசிய காவலில் வைப்பு: ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என கடும் கண்டனம்!

சென்னை:
தலைநகர் புதுடெல்லியில் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்த சமூகச் செயல்பாட்டாளர்கள் அபிஜித் திப்கே மற்றும் நேகா போரா ஆகியோரின் இருப்பிடம் தெரியாமல் தடுத்து வைத்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை என்றும், அவர்களை ஒன்றிய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் மாணவர் அமைப்புகள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் மக்கள் நலக் கோரிக்கைகளை முன்னிறுத்தி அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது களத்தில் இருந்த மாணவர் அமைப்பைச் சேர்ந்த நேகா மற்றும் அபிஜித் திப்கே ஆகிய இருவரையும் டெல்லி காவல்துறையினர் திடீரெனக் காவலில் எடுத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் எந்தக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அல்லது எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடவில்லை.

மேலும், செயல்பாட்டாளர்களின் தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் தனிமைப்படுத்தப்பட்டு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகச் சக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். “இது முறையான காவல் அல்ல, கடத்தலுக்கு இணையானது; நேகா எங்கே வைக்கப்பட்டுள்ளார் என்பதை டெல்லி காவல்துறை உடனடியாக நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று சமூக வலைதளங்களிலும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், “அபிஜித் திப்கே எங்கே? நேகா போரா எங்கே? அவர்கள் இருக்கும் இடத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாகத் தடுத்து வைத்திருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் கொடூரமான மனிதநேயமற்ற செயலாகும். ஒன்றிய அரசு உடனடியாக அவர்களைக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும். உரிமைகளுக்காக அமைதியான முறையில் நடைபெறும் ஜனநாயகப் போராட்டங்களை ஒன்றிய அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்க முனையும் ஒவ்வொரு எதேச்சதிகார நடவடிக்கையும், அந்தப் போராட்டங்களை மேலும் பல மடங்கு வலிமைப்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் குறித்து நாடு முழுவதும் உள்ள மாணவர் இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தீவிர கவலை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன