முத்தியால்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தேர்வு: புதுச்சேரியில் கட்சி நிர்வாகிகள் தீவிர ஆலோசனை!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் கீழ் செயல்படும் முத்தியால்பேட்டை, ராஜ்பவன் மற்றும் காலாப்பட்டு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய முத்தியால்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (DCC) தலைவர் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) பார்வையாளரும், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினருமான எம். நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளுடன் புதிய மாவட்டத் தலைவரை நியமிப்பது குறித்து விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான், மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்டமைப்பை ஜனநாயக முறைப்படி வலுப்படுத்தும் நோக்கில் அகில இந்திய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘சங்கதன் சிருஜன் அபியான்’ (Sangathan Srijan Abhiyan) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முத்தியால்பேட்டை மாவட்ட கமிட்டிக்கு தகுதியான, செயல்வீரரான புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகிகளின் பரிந்துரைகள், கருத்துக்கள் மற்றும் விருப்பங்கள் விரிவாக கேட்டறியப்பட்டன.
களப்பணியில் தீவிரமாக ஈடுபடும் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்டத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெறப்பட்ட அனைத்துக் கருத்துகளும் அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டு, விரைவில் முத்தியால்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


