புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை: 33 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் நேரடி பணி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் என். ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முறைப்படி வழங்கினார்.
புதுவை அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேரடி நியமனத்திற்காக அறிவிக்கப்பட்ட 38 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில், தகுதி வாய்ந்த 14 பெண்கள் மற்றும் 19 ஆண்கள் என மொத்தம் 33 நபர்கள் உடற்கல்வி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள 33 ஆசிரியர்களில், புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்த 25 நபர்களுக்கும், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கும், மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த பணி நியமனங்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிகளுக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்து பணி ஆணை பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன், விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் சிறந்து விளங்க அரசு மேற்கொண்டு வரும் தொடர் முன்னெடுப்புகளில் இந்த ஆசிரியர் நியமனம் முக்கியப் படியாக பார்க்கப்படுகிறது.


