திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த செப். 1 முதல் தடை
திருவண்ணாமலை, ஆக. 18: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை (HR&CE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
கோவிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதன் மூலம் ஏற்படும் கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவில் வளாகத்திற்குள் சமூக வலைதளங்களுக்காக ரீல்ஸ் எடுப்பதையும், புகைப்படம் எடுப்பதையும் கட்டுப்படுத்துவது இந்த தடையின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக கோவில் நுழைவாயில்களில் பிரத்யேக லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு செல்போனுக்கு ரூ. 5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை அமைப்பு (ITMS) மூலம் இதற்கான ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். கோவிலின் புனித சூழலைப் பேணிக் காக்க பக்தர்கள் இந்த விதிமுறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.