IDBI வங்கி, NHAI-ல் இடஒதுக்கீட்டுக் கொள்கை அமலாக்கம்: எஸ்.சி/எஸ்.டி நலன்களுக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் எம்.பி. வில்சன் பங்கேற்பு!

புதுடெல்லி:
பட்டியலின மற்றும் பழங்குடியின (எஸ்.சி / எஸ்.டி) நலன்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் கலந்துகொண்டார். இதில், ஐடிபிஐ வங்கி (IDBI Bank) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) ஆகியவற்றில் இடஒதுக்கீட்டுக் கொள்கை எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து விரிவான ஆய்வும் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, அகில இந்திய ஐடிபிஐ வங்கி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நலச் சங்கத்தின் (AIIBSSOOEWA) நிர்வாகிகளான சுரேகா சுனில் யாதவ், சித்நாத் கனிஃபாத் பாபர், அனூப் கோப்ரகடே, நிதின் ஷாம்ராவ் தாண்டேகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்றக் குழு முன் ஆஜராகி வங்கிப் பணியாளர்களுக்கான இடஒதுக்கீட்டு நிலைமைகள் மற்றும் நிலுவைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐடிபிஐ வங்கியில் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது தொடர்பாக நிதிச் சேவைகள் துறை செயலாளர் சஞ்சய் லோகியா, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) செயலாளர் அருணீஷ் சாவ்லா, கூடுதல் செயலாளர் டாக்டர் அலோக் பாண்டே, ஐடிபிஐ வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் சி.இ.ஓ ராகேஷ் சர்மா, செயல் இயக்குநர் உகேன் தாஷி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைத் துறை தலைமைப் பொது மேலாளர் சென்டா ஜாய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர்.
மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக செயலாளர் வி. உமாசங்கர், சாலை மேம்பாட்டு தலைமை இயக்குநர் வினய் குமார் ராஜாவத், NHAI தலைவர் சந்தோஷ் குமார் யாதவ் மற்றும் NHIDCL இயக்குநர் அமரேந்திர குமார் ஆகியோர் குழுவின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தனர். பொதுத்துறை மற்றும் மத்திய நிறுவனங்களில் சமூகநீதி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இக்கூட்டம் அமைந்தது.



